Friday, July 3, 2009

உயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான எனது இரண்டு கவிதைகள்

முயல்கள் ,கொக்குகள்
------------------------------
அரசு மருத்துவமனையின்
பழைய கட்டிட வராண்டாக்களில்
வெள்ளைநிற ஆடைகளை உடுத்தியபடி
தாதிகள் அங்கேயும் ,இங்கேயுமாய்
பரபரப்பாய் திரிகிறார்கள்
வெள்ளைநிற முயல்களை போல

எப்போதாவது மேலே வெந்நிற உடுப்போடும்
கீழே வேறு நிறமுடைய ஆடையோடும்
மருத்துவர்கள் வருகிறார்கள் , போகிறார்கள்
கையில் ஸ்டெதஸ்கோப்போடு
வெள்ளையாய் ,ஆரஞ்சு கால்களோடு
அலகில் குச்சிகளை கவ்வியபடி அலையும்
கொக்குகளைப் போல

பிரசவ வார்டிலிருந்து
முகம் மலர வெளியேறுகிறார்கள் தாதிகள்.
எப்போதாவது மருத்துவர்கள் .
கையில் வெந்நிற துணியால்
சுற்றிய குழந்தையோடு .
அப்போது முயல்கள் முயல் குட்டிகளோடு
கொக்குகள் குஞ்சுகளோடு
வெளிவருகின்றன
பிரசவவர்டில்லிருந்து .


விநோத பறவை
----------------------
வீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .
எந்த பறவையினுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
தியானத்தில் உறைந்திருக்கும் பொழுது
ஏதோவொரு பறவையின்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன்
ஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத
ஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது
உள்ளே மகள் 27ம் பக்கத்தில்
புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும்
உருவங்களைப் பற்றிய விளையாட்டொன்றை
பென்சிலால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
நானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற
மூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .
விநோதமான பறவையொன்று கிடைத்தது .
மகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்
அவ்விநோத பறவையினத்தின்
முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை .

உயிர்எழுத்து இதழ் 25 ல் வெளியான எனது இரண்டு கவிதைகள்

ஊறுகாய் ஜாடி
-------------------
வீட்டில் பழமையான
ஊறுகாய் ஜாடியைப் போலிருந்த
பாட்டியென்ற வார்த்தை
உடைந்து போனது நேற்று .
அம்மா மாரடித்து அழுதாள் .
சிறிது காலத்திற்குப்பின்
அக்காவிற்கு குழந்தை பிறந்தது .
வேறொரு ஜாடியை
வாங்கிகொண்டுவந்து வைத்து போல
வீட்டில் மீண்டும்
பாட்டி என்ற வார்த்தை உருவானது .
மூன்று நாட்கள் இருந்துவிட்டு
அக்குழந்தை இறந்துவிட்டது .
இப்போது ஒரு குட்டிஜாடியும்
பெரியஜாடியும்
சேர்ந்தே உடைந்து போனது .


"க்ளிப்புகள்"
--------------
நீண்ட நைலான் கொடியில்
துணிகள் துவைத்து
உலர்த்தப் போட்டுக்கிடக்கிறது .
ஒட்டக நிறத்திலிருக்கும் மேலாடையையும்
அதன் இணைக்காய் கீழ் அணியும்
கருமந்தி நிறத்து "லீ" பிராண்ட் கால்சராயையும்
வெள்ளை வெளேரென்று
கொக்கின் நிறத்திலிருக்கும்
உள் பனியனையும் ,
கைகுட்டையையும் ,
முதலையின் வாயைப் போன்றிருக்கும்
"க்ளிப்புகள்" கவ்விக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில்
துண்டுதுண்டாய் காயப்போட்டுக் கிடக்கும்
என் உடலையும்
அது ஒரு சேர கவ்விக்கொண்டிருகிறது.